search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி ஹனீபாஜாரா"

    கழிவறை கேட்டு தந்தை மீது புகார் அளித்த ஆம்பூர் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார். #Toilet
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லாவின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் அவதியடைந்த மாணவி ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்ட வேண்டும் என்று கேட்டு வந்தார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதனால் சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரை பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டி தரவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்த வெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.


    மேலும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரிக்கை வைத்தார். மாணவியின் செயலை எண்ணி கலெக்டர் ராமன், நெகிழ்ச்சியடைந்தார். இதையடுத்து அவர், ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு மாணவியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து மாணவியின் வீட்டில் கழிவறை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது.

    மேலும் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக நியமித்து நகராட்சி கமி‌ஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.

    தற்போது மாணவி ஹனீபாஜாரா விவரங்களை மத்திய அரசின் கிராம குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தூய்மை இந்தியா திட்ட இயக்குனரகம் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளது.

    சிறுமி ஹனீபாஜாராவின் முழு விவரங்களையும் அவரது புகைப்படத்துடன் மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை ஆம்பூரில் உள்ள ஹனீபாஜாரா வீட்டிற்கு கலெக்டர் ராமன் நேடியாக சென்றார். அவர் மாணவி ஹனீபாஜாராவை சந்தித்து அவரது செயலையும், துணிச்சலான முடிவையும் பாராட்டினார்.

    ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து மாணவிக்கு பரிசு வழங்கினார்.

    மாணவியின் வீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை பணிகளை பார்வையிட்டார்.

    ஆம்பூர் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், தாசில்தார் சுஜாதா மற்றும் வருவாய் துறையினர் உடன் சென்றனர்.  #Toilet
    ×